×

மாவட்டம் முழுவதும் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு

சேலம் : ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது.சிவன் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனவிழா சிறப்பாக நடைபெறும். இந்தவகையில் சேலம் டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில், நடப்பாண்டு ஆருத்ரா தரிசனவிழா நேற்று (20ம் தேதி) நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை விடிய, விடிய நடராஜருக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், பழங்கள்  கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.

கொரோனா தொற்று காரணமாக விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, யூ டியூப்பில் தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, யூடியூப்பில் நடராஜருக்கு செய்யப்பட்ட அபிஷேகத்தை பக்தர்கள் கண்டுகளித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று சுகவனேஸ்வரருக்கு வதங்க நாகாபரணமும், அம்மனுக்கு தங்க கவசமும் சாத்துப்படி செய்யப்பட்டு நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளித்தார். விழா நிறைவு பெற்றதையடுத்து பக்தர்கள் தரிசனத்துக்கு அதிகாலை முதல் வரத்தொடங்கினர். பின்னர், நீண்டவரிசையில் காத்திருந்து வழிபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், கோயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் உத்தமசோழபுரம் கரபுரநாதர், பேளூர் தான் தோன்றீஸ்வரர், தாரமங்கலம் கைலாசநாதர், ஆறகளூர் சிவன் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கெங்கவல்லி: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வீரகனூர் கங்கா சௌந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் பெருமான் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள்பாலித்தார். சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே வேலநத்தத்தில் உள்ள ஆதிவிநாயகர் கோயில் வளாகத்தில், ஆருத்ரா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, சிவகாமி அம்மையார் சமேத நடராஜர் பெருமானுக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மையாருடன் நடராஜ பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சிறப்பு பூஜையில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இடைப்பாடி: இடைப்பாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவாலயங்களில் நேற்று ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளண்டிவலசு ஆனந்தத் தாண்டவ நடராஜர் கோயில், இடைப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயில் மற்றும் பூலாம்பட்டி கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மேலும், ஆரூத்ரா தரிசன விழாவையொட்டி வெள்ளாண்டிவலசு ஆனந்தத் தாண்டவ நடராஜர் கோயிலில் இருந்து சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் திருவெம்பாவை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.

Tags : Arudra Darshan ,Shiva , Salem: On the occasion of Arudra Darshan, a special anointing ceremony was held for Natarajar at the Sukhavaneswarar Temple in Salem.
× RELATED முருகப் பெருமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் தலங்கள்