உதகையில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த பவானீஸ்வரர் கோவில் தேரோட்டம்: தேர் இழுத்து வந்த பழங்குடியினர் நடனம் ஆடி வழிபாடு..!!!

உதகை: உதகையில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த பவானீஸ்வரர் கோவில் தேரை இழுத்து வந்த தோடர் இன பழங்குடியினர் நகரின் மையப்பகுதியில் வட்டமாக நின்று ஆடிய பாரம்பரிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. உதகை அருகே பவானீஸ்வரர் கோவில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர் ஊர்வலம் நடைபெற்றது. தேரை 100- க்கும் மேற்பட்ட தோடர் இன பழங்குடியின ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் இருந்து உதகை மத்திய பேருந்து நிலையத்திற்கு இழுத்து வந்தனர்.

அங்குள்ள பாறை முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து தேரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு இழுத்து வந்தனர். அப்போது தேரில் எழுந்தருளி காட்சியளித்த நடராஜ பெருமானை வழிபட்டனர். பின்னர் ஒன்று கூடிய தோடர் இன பழங்குடியின ஆண்கள் வட்டமாக நின்று ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தவாறு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினார். அப்போது அவர்கள் புத்தாண்டில் நல்ல மழை பெய்யவேண்டும், மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என தங்களது தோடர் மொழியில் பாடியவாரே நடனம் ஆடினர். இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.       

Related Stories: