×

திருவாதிரையை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு :திருவாதிரையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. நேற்று திருவாதிரை திருநாள் மற்றும் 18 வகையான சித்தர்கள் வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணிநேரம் மட்டும் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

காலை 7 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்கள் உடைமைகளை வனவர் சின்னக்கருப்பன் தலைமையில் வனத்துறையினர் சோதனை செய்து பாலிதீன் பைகள் போன்றவற்றை பறிமுதல் செய்து துணிப்பைகளை வழங்கினர்.

 காலை 8.30 மணிக்கு அகஸ்தியர் உள்ளிட்ட 18 வகையான சித்தர்களுக்கு பால், பழம், பன்னீர், இளநீர் என 18 வகையான அபிஷேகம் நடந்தது. இதன் பின் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவரை டோலி கட்டி பணியாளர்கள் தூக்கி சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Chaduragiri Temple ,Thiravatria , Sathuragiri,Sundaramahalingam temple, devotees allowed
× RELATED சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!