×

லட்சத்தீவில் இனி வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது!: நிர்வாகத்தின் முடிவால் மக்கள் அதிருப்தி..!!

லட்சத்தீவு: லட்சத்தீவில் இனி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக நம் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே ஞாயிற்றுக்கிழமை தான் முதலில் நினைவிற்கு வரும். பள்ளி செல்பவர்களும், பணிக்கு செல்பவர்களும் ஞாயிற்றுக்கிழமை என்றாலே உற்சாகத்தில் திளைப்பர். ஆனால் லட்சத்தீவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பதிலாக அங்குள்ள மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஏனென்றால் லட்சத்தீவு பகுதியில் அதிகமான இஸ்லாமியர்கள் உள்ளதால் அங்கு வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

இந்நிலையில், லட்சத்தீவில் இனி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் லட்சத்தீவில் வெள்ளிக்கிழமை விடுமுறையை நிர்வாகம் ரத்து செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமைக்கு பதில் பள்ளி மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று லட்சத்தீவு கல்வித்துறை அறிவித்துள்ளது. பல ஆண்டு காலமாக லட்சத்தீவில் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டு வந்தது. நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கையால் மாணவர்கள் மட்டுமின்றி அங்கு வாழும் மக்களும் பெரும் அதிருப்தியில் காணப்படுகின்றனர்.

எந்த அமைப்பினருடனும் ஆலோசிக்காமல் லட்சத்தீவு நிர்வாகம் விடுமுறை குறித்து முடிவு எடுத்துள்ளது என்று எம்.பி. முகமது பைசல் கண்டனம் தெரிவித்துள்ளார். தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னராக இருப்பவர் பிரபுல் படேல். லட்சத்தீவின் நிர்வாக பொறுப்பும் இவருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் மாட்டிறைச்சிக்கு தடை, மது விடுதிகளுக்கு அனுமதி, வளர்ச்சிக்கு நிலத்தை எடுத்துக்கொள்ளும் வரைவு சட்டம், குண்டர் சட்டம் அமல் போன்ற நடவடிக்கைகளை லட்சத்தீவில் எடுத்தார். இது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இதற்கிடையே லட்சத்தீவில் இனி வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்பது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags : Lakshadweep , Lakshadweep, Friday, School Students, Holidays
× RELATED லட்சத்தீவுகளில் பெட்ரோல், டீசல் விலை ரூ15.30 குறைப்பு