×

தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல் :மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது.. வேலை நிறுத்தத்தை அறிவித்த புதுக்கோட்டை மீனவர்கள்!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்ததைக் கண்டித்து புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
பாக் ஜலசந்தி கடலில் கடந்த 18ம் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், மன்னார் வளைகுடா கடலில் நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் என 55 மீனவர்களை இலங்ைக கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரும், ஊர்காவல்துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மண்டபம் மீனவர்கள் 12 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 மீனவர்களையும், 8 விசைப்படகுகளையும் விடுவிக்கவும், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்கவும் வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர். இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும்  14 தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த  14 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் 2  மீன்பிடி விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்களை மயிலடி மீன்பிடி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஜெகதாபட்டினத்தில் 1,200 மீனவர்களின் போராட்டத்தால் 200 விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டன. 


Tags : Sri Lankan Navy ,Puduckote , மீனவர்கள்
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை