நெமிலி அருகே குழந்தை இறந்து பிறந்த சம்பவம்: யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது: தலைமறைவான அக்காவுக்கு போலீஸ் வலை

நெமிலி: நெமிலி அருகே யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது அக்காவை தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன்(34), மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி(28). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு மருத்துவர்கள் கடந்த 13ம் தேதி பிரசவத்துக்கான நாள் குறிப்பிட்டார்களாம். ஆனால், அன்றைய தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்படவில்லையாம். இந்நிலையில். கடந்த 18ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து லோகநாதன் தனது அக்கா கீதா உதவியுடன் யூடியூப் சேனலை  பார்த்து பிரசவம் பார்த்துள்ளார்.

இதில் ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. அத்துடன் கோமதிக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதில், அவரது உடல்நிலையும் கவலைக்கிடமானது. இதனால் அச்சம் அடைந்த லோகநாதன் தனது அக்கா உதவியுடன் மனைவியையும், இறந்த குழந்தையும் புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் கோமதிக்கு முதலுதவி  சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு புன்னை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மோகன் தகவல் கொடுத்தார். அதன்பேரில் நெமிலி போலீசார் அங்கு வந்து லோகநாதனிடம் விசாரணை நடத்தினர். மேலும் கோமதியை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், மனைவிக்கு வீட்டில்  யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்தது உறுதியானதையடுத்து, லோகநாதனை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது அக்கா கீதாவை (38) தேடி வருகின்றனர்.

Related Stories: