×

பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்காக சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம்: ஆரன்முளாவில் இருந்து நாளை புறப்படுகிறது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து நாளை புறப்படுகிறது. சபரிமலையில் தற்போது மண்டல காலபூஜைகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த நிபந்தனைகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இன்று முதல் பெருவழிப்பாதையை திறக்கப்பட  உள்ளது. தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம்.

இந்த தங்க அங்கி நாளை  காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்படும். 25ம் தேதி பம்பையை அடையும், பின்னர் பம்பை கணபதிகோயில் பக்தர்கள் தரிசனத்திற்கு தங்க அங்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். மறுநாள் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு 10 மணியளவில் ேகாயில் நடை சாத்தப்படும். அன்றுடன் 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடையும்.
மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்.

நேரடி நெய்யபிஷேகம் தொடங்கியது
சபரிமலையில் நெய்யபிஷேகம் மிகவும் முக்கியமானதாகும். ஐயப்பனுக்கு பிடித்த இந்த வழிபாடு தினமும் அதிகாலை முதல் மதியம் வரை நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் இருமுடியில் கட்டிவரும் நெய்யை, பாத்திரங்களில் கொண்டு வந்து கோயிலில் கொடுப்பர். இந்த நெய் நேரடியாக ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நேரடி நெய் அபிஷேகம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக பக்தர்கள் கொண்டு வரும் நெய்ைய கோயிலில் தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் கொடுக்க வேண்டும். அதன்பின்னர் அபிஷேகம் செய்த நெய்யை வேறொரு கவுன்டரில் இருந்து வாங்கி செல்லவும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் நடத்த தேவசம் போர்டுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களின் நேரடி நெய்யபிஷேகம் தொடங்கியது.

Tags : Sabarimala ,Puja ,Aranmula , Mandala Puja, Sabarimala
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்