மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி: தமிழ் மொழி வளர்ச்சிக்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு?

புதுடெல்லி: செம்மொழியான தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் என்னென்னநடவடிக்கைகள் எடுத்துள்ளது என மக்களவையில் எழுத்துப்பூர்வமாக மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

அதன் விவரம்:

* கடந்த மூன்று ஆண்டுகளில் செம்மொழியான தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

* கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டு, செலவிடப்பட்ட தொகை  எவ்வளவு? வழங்கப்பட்ட மானியங்கள் எவ்வளவு? இதை ஆண்டுவாரியாக தெரிவிக்கவும்.

* கடந்த ஐந்து ஆண்டுகளில் பிற மொழிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டு, செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? வழங்கப்பட்ட மானியங்கள் எவ்வளவு? இதை மொழி மற்றும் ஆண்டு வாரியாக தெரியப்படுத்தவும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக, ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை ஒன்றிய அரசு நிறுவி, அதன் மூலமாக பல்வேறு கருத்தரங்கம், பயிலரங்கம், குறுகிய கால திட்டங்கள், திருக்குறளை பிற மொழிகளில் மொழிபெயர்த்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் மூலமாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக 2016-17ல் 5.02 கோடியும், 2017-18ல் 10.27 கோடியும், 2018-19ல் 5.46 கோடியும், 2019-20ல் 9.83 கோடியும், 2020-21ல் 11.87 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மொழியையும் ஊக்குவிப்பதே ஒன்றிய அரசின் கொள்கையாகும். எனவே மொழிவாரியாக மானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. பல்வேறு திட்டங்களின் கீழ் இந்திய மொழிகள் ஊக்குவிப்பு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தி, உருது உள்ளிட்ட பல மொழிகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது’ என கூறி உள்ளார்.

Related Stories: