×

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவக்குழு அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ குழுவை அமைக்க அனுமதி வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், அதில் இடம்பெறுபவர்களை எய்ம்ஸ் இயக்குனர் தேர்வு செய்வார் என நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு தரப்பில் அமைக்கப்பட்டது. இதையடுத்து அதற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, “ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு,”சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற அப்போலோவின் கோரிக்கையை ஏற்க முடியாது.  மருத்துவ குழு அமைத்தால் அதில் இடம்பெறுபவர்களை நாங்கள் தான் தேர்ந்தெடுப்போம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குரிப்பிடாமல் கடந்த 30ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில்,” ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவிடும் விதமாக மருத்துவக் குழு அமைக்க நீதிமன்றம் அனுமதிக்கிறது.

இதில் இடம்பெறுபவர்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தேர்வு செய்ய வேண்டும். அதேபோன்று சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அப்போலோ மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கை பொருத்தமட்டில் மூன்றாவது தரப்பினராக இருக்கும் சசிகலாவுக்கு வழக்கு தொடர்பான நகலை வழங்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், ஆறுமுகசாமி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து நேற்று உத்தரவிட்டனர்.


Tags : Supreme Court ,Arumugasami Commission , Supreme Court
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...