இங்கிலாந்து ஆய்வில் புது தகவல்: டெல்டாவை விட ஒமிக்ரான் தீவிரம் குறைந்தது அல்ல: தடுப்பூசி பாதுகாப்பையும் மீறி தாக்கும்

லண்டன்: டெல்டாவை விட ஒமிக்ரான் வைரஸ் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக எந்த ஆதாரமும் இல்லை என இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்களிலேயே மிகத் தீவிரமானதாக கருதப்படும் ஒமிக்ரான் வகை புதிய தொற்று உலகில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த வைரஸ் இங்கிலாந்தில் புதிய அலையை ஏற்படுத்தி இருக்கிறது.  இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக இங்கிலாந்தின் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் சமீபத்திய தகவல்களை வைத்து ஆய்வு நடத்தி உள்ளனர். அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஒமிக்ரான் வகை வைரசால் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து, முந்தைய டெல்டா வைரசைக் காட்டிலும் 5.4 மடங்கு அதிகம் இருக்கிறது. டெல்டாவை விட ஒமிக்ரான் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக எந்த ஆதாரமும் இல்லை. அதே சமயத்தில் ஒமிக்ரான் தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய தேவை தற்போதைய நிலையில் குறைவாக உள்ளது.

தடுப்பூசி மற்றும் ஏற்கனவே வைரஸ் தொற்றால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை மீறி ஒமிக்ரான் வைரஸ் தாக்கக் கூடியது. எனவே பொது சுகாதாரத்திற்கு உடனடியாக மிகப்பெரிய அச்சுறுத்தலை ஒமிக்ரான் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, இங்கிலாந்தில் தொடர்ந்து 2வது நாளாக ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 90,418 பேர் தினசரி தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 10,059 பேர் ஒமிக்ரான் வகை தொற்றுக்குள்ளாகினர். நேற்று முன்தினம் புள்ளி விவரங்களின் படி, தினசரி தொற்று எண்ணிக்கை 82,886 பேராக உள்ள நிலையில், 12,133 பேர் ஒமிக்ரான் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இங்கிலாந்தில் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 37,101 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்றும் ஒமிக்ரான் பாதிப்பு இருந்தது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 161 ஆக நேற்று அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவும் என்பதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் என உலகின் பல நாடுகளில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து ஒன்றிய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே, ஒமிக்ரானில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பலரும் சட்டவிரோதமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் 2 டோஸ் முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் கூடுதல் டோஸ் தடுப்பூசியை பணம் செலுத்தி போட்டுக் கொள்கின்றனர். மேலும் சிலர் 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்திக் கொள்வதாகவும், முதல் 2 டோஸ்கள் ஒரே மருந்தையும், 3வது டோஸ் வேறு மருந்தையும் செலுத்திக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு, எந்த அறிவியல்பூர்வ தகவலும் இல்லாமல் தடுப்பூசிகளை மாற்றி மாற்றி செலுத்திக் கொள்வதால் விபரீத பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: