×

அனைத்து ஏடிஎம்களிலும் கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: வங்கிகளுக்கு டிஐஜி சத்யபிரியா அறிவுறுத்தல்

திருப்போரூர்: காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா திருப்போரூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, திருப்போரூர், மானாம்பதி, காயார் ஆகிய காவல் நிலையங்களின் பதிவேடுகள், குற்ற வழக்குகளின் தற்போதைய நிலை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர், திருப்போரூர் காவலர் குடியிருப்பை பார்வையிட்டு, அங்குள்ள காவலர்கள் குடும்பத்தினரின் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. செங்கல்பட்டு காவல் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின் காவல் நிலையங்களில் எந்த காவலர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதோ, அங்கு கூடுதல் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காயார் காவல் நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டவும், 120 ஆண்டுகள் பழமையான திருப்போரூர் காவல் நிலையத்தை பழமை மாறாமல் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் எடுத்து வருவதால் அதை முற்றிலுமாக தடுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல் காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளில், குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்று தரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். அனைத்து ஏடிஎம்களிலும் கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். அதேபோல் மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகளில் அரசு செலவில் சிசிடிவி கேமரா பொருத்தவும், தேவைப்படும் இடங்களில் தனியார் பங்களிப்புடன் இப்பணியை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக இருப்பதால் குற்றச் செயல்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் செய்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் புதிய காவல் நிலையங்கள் எதுவும் உருவாக்கும் எண்ணம் இல்லை என்றார்.

Tags : DIG ,Satyapriya , DIG Satyapriya
× RELATED கைதிகளுக்கு நூலகம் திறப்பு