×

சக்தி வாய்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

சென்னை: சக்தி வாய்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும், அவரது சாதனை என்பது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால்தான் சாத்தியமானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலை வளாகத்தில் நடந்தது. தமிழக ஆளுநரின் பேச்சின் தொடக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசும்போது, டைனமிக் சிஎம் (சக்தி வாய்ந்த முதல்வர்) எம்.கே.ஸ்டாலின் என்று குறிப்பிட்டுவிட்டு தனது பேச்சைத் தொடங்கினார். (அப்போது பலத்த கை தட்டல் எழுந்தது).

தொடர்ந்து, அவர் பேசியதாவது: தமிழக முதல்வரே நீங்கள் என்ன சாதித்துள்ளீர்களோ அது உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் சாத்தியமாகியுள்ளது. இந்த அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் எப்போதும் உங்களை உயர்த்தும். டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், கல்வி, சேவை, ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. நாட்டில் கொரோனா தொற்று இன்னும் நீடித்து புதுப்புது வகையில் வந்து கொண்டே இருக்கிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதால் வாழ்க்கை முறையை பாதுகாப்பானதாக வைத்துக் கொள்ள முடியும். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மக்களின் நல்வாழ்வு குறித்த அக்கறை முக்கியமானதாக உள்ளது.

ஏழைகளுக்கும் மருத்துவம் எளிதில் கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழ்நாடுதான் முன்னிலையில் உள்ளது. தவிர்க்க முடியாத வகையில் உள்ள சேவைத் துறை வணிகமயமாகி வருகிறது. சந்தை என்றால் அனைத்துக்கும் விலை இருக்கும். மதிப்பு மிக்க இந்த சேவைத் துறையை வணிக மயமாக்கிவிடக் கூடாது. நோயாளிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை மருத்துவர்கள் கூர்ந்து கேட்க வேண்டும். அந்தக் கலையை மருத்துவர்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். நோயாளிகளை திறந்த மனதுடன் அணுக வேண்டும். மருத்துவத்துறையில் தினமும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அதை கற்று மருத்துவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவர்கள் சமுதாயத்தின் விலை மதிக்க முடியாத சொத்துகள். அவர்கள் தங்கள் உடல் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். உடலை சரியாக பராமரிக்க வேண்டும். கடும் அழுத்தம் நிறைந்ததாக மருத்துவர்களின் வாழ்வு இருந்தாலும், அவர்கள் தங்கள் உடல் நலன், மன நலன் ஆகியவற்றை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். திருக்குறளில் 941 முதல் 950 வரை உள்ள குறளின்படி மருத்துவர்கள் வாழ வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Governor of Tamil Nadu ,RN ,Ravi , Powerful Chief Minister MK Stalin: Praise to the Governor of Tamil Nadu RN Ravi
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...