×

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை காவல்துறை கைது செய்ய முயற்சிப்பதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை காவல் துறை கைது செய்யும் முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருந்தபொழுது, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பணம் பெற்றதாக புகார்கள் வந்துள்ளதாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், அந்த புகாருக்கு எந்தவிதமான நேரடி முகாந்திரமும் இல்லாத நிலையில், முன்னாள் அமைச்சரை இவ்வழக்கில் இணைத்து அவரை கைது செய்ய துடிக்கிறது அரசு.

உச்ச  நீதிமன்றத்தில் அவர் பிணை கோரும் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், காவல் துறையின் மூலம், ராஜேந்திரபாலாஜி குடும்ப உறுப்பினர்களான வசந்தகுமார், ரமணா மற்றும் வாகன ஓட்டுநர் ராஜ்குமார் ஆகிய மூவரையும், எந்தவித புகாரும் இல்லாத நிலையில், அமைச்சரின் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தனக்குள்ள சட்ட உரிமையின்படி புனையப்பட்ட இந்த வழக்கில், தனக்கு பிணை வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை காவல்துறை கைது செய்ய துடிப்பதையும், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் கடும் கண்டனத்திற்கு பிறகும், அவரது உறவினர்களை தொந்தரவு செய்வதையும், கடுமையாக கண்டிக்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Rajendrapalaji ,Edappadi Palanisamy , Is the police trying to arrest former minister Rajendrapalaji? Condemnation of Edappadi Palanisamy
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்