×

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேர்தல் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது: வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க வழிவகுக்கும்

புதுடெல்லி: வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வழிவகுக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டுமென்ற எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தேர்தல் சட்டத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்ய தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசிடம் பரிந்துரை செய்து வருகிறது. அந்த வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

ஆதாருடன் இணைப்பதன் மூலம் போலி வாக்காளர்களை நீக்கவும், ஒரே வாக்காளர் நாட்டின் பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை தடுக்கவும் முடியும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதுதொடர்பாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘இது கள்ள ஓட்டிற்கு முடிவு கட்டும், தேர்தல் நடைமுறை மீது மேலும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்’’ என்றார்.

ஆனால் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதாரை இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘இது மக்களின் தனிமனித சுதந்திரத்திற்கு வேட்டு வைக்கக் கூடியது. தகவல் பாதுகாப்புக்காக இந்தியாவில் எந்தவொரு சட்டமும் இல்லை. இந்த நிலையில் இப்படிப்பட்ட மசோதாவை கொண்டு வரக்கூடாது. எனவே மசோதாவை நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்’’ என்றார். இந்த மசோதா, தனியுரிமை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி கூறினார்.

காங்கிரஸ் மூத்த எம்பி சசிதரூர் பேசுகையில், ‘‘ஆதார் என்பது இந்தியாவில் வசிப்பவரா என்பதற்கான ஒரு ஆவணம். இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் வழங்கப்படுவது. வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை உரிமை. எனவே வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்தால், இந்தியர் அல்லாதவர்களுக்கும் நாம் வாக்குரிமை கொடுப்பதாகிவிடும்’’ என்றார். இதே போல ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாசுதீன் ஓவைசி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன்சமாஜ், ஆர்எஸ்பி உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘இந்த மசோதா மீதான சந்தேகங்கள் அடிப்படை ஆதாரமற்றவை.

எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் தனிநபர் சுதந்திரம் தொடர்பான தீர்ப்பை தவறாக புரிந்து கொண்டுள்ளன. இந்த மசோதா மூலம் தேர்தல் நடவடிக்கையில் மேலும் நம்பகத்தன்மை ஏற்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முழு தகுதி வாய்ந்தது இந்த மசோதா’’ என்றார். இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுடன் அமலுக்கு கொண்டு வரப்படும். தேர்தல் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதும் தொடர் அமளி காரணமாக அவை இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்
* புதிய வாக்காளர்கள் மற்றும் ஏற்கனவே வாக்காளர்களாக இருப்பவர்களிடம் தேர்தல் ஆணையம் ஆதார் எண்ணை கேட்டு பெற இந்த மசோதா வழிவகை செய்கிறது. வாக்காளர் தனது ஆதார் எண்ணை தெரிவிக்க இயலாமை காரணமாக, அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. வேறு பிற ஆவணங்கள் கேட்டு பெறப்படும். புதிய வாக்காளர்களிடமும் ஆதார் கட்டாயப்படுத்தப்படாது என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
* இனி புதிய வாக்காளர்கள் ஜனவரி 1, ஏப். 1, ஜூலை 1, அக். 1 ஆகிய 4 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்யலாம். ஆண்டிற்கு இந்த 4 தினங்களில் பெயர் சேர்க்கை, திருத்தம், நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* பெண் ராணுவ வீரர்களின் கணவர்களுக்கும் சேவை வாக்காளர் சலுகை வழங்க, ராணுவ வீரர்களின் ‘மனைவி’ என்ற வார்த்தைக்கு பதிலாக இனி ‘துணைவர்’ என்று பயன்படுத்தப்படும்.
* தேர்தலை நடத்த பள்ளிகள் மட்டுமின்றி எந்த பொது இடத்தையும் தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்ள இந்த மசோதா அதிகாரம் வழங்குகிறது.

* 55 மீனவர் கைது திமுக கடும் அமளி
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை திமுக எம்பிக்கள் மக்களவையில் நேற்று எழுப்பினர்.
அவை காலையில் கூடியதும், தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதே போல லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தமிழக மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டுமென திமுக எம்பிக்கள் குரல் எழுப்பினர். இந்த அமளிக்கு இடையே, தேர்தல் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

* எதிர்ப்பது ஏன்?
வாக்காளர் அட்டையை, ஆதாருடன் இணைக்கும் முயற்சியை தேர்தல் ஆணையம் கடந்த 2015ம் ஆண்டில் முதலில் தொடங்கியது. சோதனை அடிப்படையில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஆதாருடன் இணைக்கப்பட்டதும் 55 லட்சம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் 3 மாதத்தில் சுமார் 30 கோடி பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்தனர். இதற்குள் உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கு தடை விதித்தது. வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையம் வேறு பல்வேறு காரணங்களை கூறியது. எனவே, இதுபோல நாடு முழுவதும் அனைவரின் வாக்காளர் அட்டையுடன், ஆதார் இணைக்கப்பட்டதால், பல கோடி பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய கவலை. அதோடு ஆதார் மூலமாக வாக்காளர்கள் தகவல்கள் திருடு போவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Lok Sabha , Election law amendment bill passed amid strong opposition in Lok Sabha: Leads to link support with voter card
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...