×

தரிசனத்துக்கு ரூ.1.50 கோடி கட்டணம்: ஏழுமலையான் கோயிலில் உதய அஸ்தமன சேவை ஆன்லைனில் 531 டிக்கெட்டுகள் வெளியிட ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உதய அஸ்தமன சேவையை வெள்ளிக்கிழமை தரிசிக்க 25 ஆண்டுகளுக்கு ₹1.50 கோடியும், மற்ற நாட்களுக்கு ₹1 கோடியும் கட்டணம் நிர்ணயித்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 531 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் காலை முதல் இரவு வரை சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, கல்யாண உற்சவம், உள்பட ஏகாந்த சேவைகள் நடைபெறுகிறது. இந்த உற்சவங்கள் அனைத்தையும் ஒரு நாள் முழுவதும் கோயிலில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் விதமாக உதய அஸ்தமன சேவை எனும் சேவை செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, தேவஸ்தானம் சிறப்பு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, உதய அஸ்தமன சேவையில் பங்கேற்க சாதாரண நாட்களில் ₹1 கோடியும், வெள்ளிக்கிழமைகளில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவதால் அன்று மட்டும் ₹1.50 கோடி என தேவஸ்தானத்திற்கு செலுத்தினால், பக்தர்கள் தங்களுக்கு உகந்தநாளை தேர்வு செய்து ஆண்டிற்கு ஒரு நாள் என 25 ஆண்டுகளுக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட உள்ளது. மேலும், உதய அஸ்தமன சேவைக்காக பக்தர்கள் செலுத்தும் நிதியை, திருப்பதியில் கட்டப்படக்கூடிய குழந்தைகள் நல மருத்துவமனைக்கு செலவு செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக 531 டிக்கெட்டுகளை ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்யும் விதமாக ஏற்பாடு செய்யப்பட உள்ளது. விரைவில் இதற்கான முன்பதிவு ஆன்லைனில் வெளியீடு செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags : Vitation ,Udaya Asthamana Service ,Sevemalayan Temple , Rs 1.50 crore fee for darshan: Udaya Asthama service at Ezhumalayan temple to issue 531 tickets online
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...