×

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்ல வழக்கில் மேல்முறையீடு செய்யாதது குறித்து ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்ல வழக்கில் மேல்முறையீடு செய்யாதது குறித்து ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது. நீதிபதி சேஷசாயி அமர்வும் இதேபோல் உத்தரவிட்டதால் மேல்முறையீடு செய்யவில்லை என்று அரசு ஐகோர்ட்டில் விளக்கமளித்துள்ளது. இரு அமர்வுகளின் உத்தரவை ஏற்று கொண்டதால் மேல்முறையீடு செய்யவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றும் வகையில் கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்ய அதிமுகவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு அறிவித்ததை ரத்து செய்யக்கோரி ஏற்கனவே ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகியோரால் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி நினைவு இல்லம் அமைப்பதால் எந்தவொரு பொது பயன்பாடு இல்லை என்பதாலும் ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் இந்த நினைவு இல்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்று கூறி வேதா நிலையத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து கடந்த 24ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சி.வி.சண்முகம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமியாஜி, தம்முடைய வாதத்தில் தனி நீதிபதி வழக்கை தவறாக அணுகியுள்ளார் என்றும் பொதுமக்கள் பயன்பாடை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. அரசு தான் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் மற்ற தலைவர்களோடு ஒப்பிட்டு அளவுகோலை பயன்படுத்தி இருப்பது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் ஜெயலலிதா 6 முறை முதல்வராக இருந்து மக்கள் நல பணிகளை ஆற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்த அளவு ராஜாஜி, காமராஜ் இவர்களுக்கு ஏற்கனவே சிலை இருக்கிறது. நினைவிடம் இருக்கிறது. அவர்கள் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் இருப்பதாகவும், எனவே ஜெயலலிதாவிற்கு ஒரு நினைவிடம் போதும் என்று நீதிமன்றம் சொல்ல முடியாது என்றும் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கு தனிநீதிபதி முன்பு நடைபெற்று கொண்டிருந்த போதே மனுதாரர்கள் தங்களை இணைத்து என்ற வாதத்தையும் செய்யவில்லை என்றும் இந்த வழக்கை பொறுத்தவரை வீட்டின் சாவி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டு தாங்கள் கையகப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்தனர். வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன், அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு, ஜெயலலிதாவின் சொத்துகளில் ஒருபகுதியை அறக்கட்டளையாக அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் இந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரு அமர்வுகளின் உத்தரவை ஏற்று கொண்டதால் மேல்முறையீடு செய்யவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

Tags : Government of Tamil Nadu ,I-Court ,Jayalalithaa ,Boise Estate , jeyalalitha
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...