×

ஒமிக்ரான் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை; சென்னை விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் கட்டாயம்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் தங்களது விவரங்களை பதிவு செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் அதிகம் பாதித்த “ஹைரிஸ்க்” நாடுகளான தென் ஆப்பிரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், உட்பட 12 நாடுகளில் இருந்துவரும் சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும்வரை, விமான நிலையத்தில் காத்திருந்து அதன் பின்னர் தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டும். அங்கேயும் அவர்கள் ஏழு நாட்கள் தனிமையில் இருந்து 8வது நாள் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே சென்னை விமானநிலையத்தில் அமலில் உள்ளது.

 இந்தநிலையில் ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தற்போது ஒமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதற்காக பயணிகள், அவர்கள் வந்து இறங்க வேண்டிய இடத்துக்கு வருவதற்கு முன்னதாகவே Airsuvidha இணையதளத்தில் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணையதளத்தில் சுய ஒப்புதல் விண்ணப்பம் செய்யும்போது அவர்கள் இந்த பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக 14 நாட்களில் எந்தெந்த நாடுகளுக்கு சென்றுள்ளனர் என்பதையும் குறிப்பிட வேண்டும். முதல்கட்டமாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய 6 சர்வதேச விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டாய முன்பதிவு நடைமுறை சென்னை உள்ளிட்ட 6 சர்வதேச விமானநிலையங்களில் இன்று அதிகாலை 1 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய முறையால் எந்தெந்த விமானங்களில் “ஹைரிஸ்க்” நாடுகளில் இருந்து எத்தனை பயணிகள் வருகின்றனர். அவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு சென்றுவிட்டு வருகின்றனர் என்ற முழு விவரங்கள், சென்னை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முன்னதாகவே தெரிந்து விடும். இதை பொறுத்து அவர்களுக்கான ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுப்பதற்கான ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருப்பார்கள். அத்துடன் பயணிகள் டெஸ்ட்டிற்கான கட்டணத்தையும் இணைய தளம் மூலமாகவே கட்டிவிடுவதால் இங்கு பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. விரைவில் ரிசல்ட் வந்ததும் பயணிகள் வீடுகளுக்கு சென்றுவிடலாம். இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai Airport , Intensive action to control Omigron; RTPCR Test Mandatory at Chennai Airport
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்