×

தவறான செய்தி வெளியிட்டு, கலவரத்தை தூண்டிய சாட்டை முருகன் திருவள்ளூர் சிறையில் அடைப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் செயல்பட்டுவரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூரில் உள்ள தனியார் மெரைன் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். கடந்த 5 நாட்களுக்கு முன் விடுதியில் உணவு சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பூந்தமல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதை கண்டித்து நேற்று முன்தினம் சுமார் 14 மணி நேரம் தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் இவ்வளவு மணி நேரம் நீடிக்க நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை முருகன்தான் காரணம் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சாட்டை முருகன் டிவிட்டரில் ஒரு பதிவு போட்டார். அதில், ‘தரமற்ற உணவு சாப்பிட்ட 4 பெண்கள் பலியாகி உள்ளனர்’ என்று கூறப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் மீண்டும் வெளியிட்ட ஒரு பதிவில், 9 பெண்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். சாட்டை முருகனின் டிவிட்டர் பதிவை பார்த்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், போராட்ட களத்திற்கு சென்று இத்தகவலை கூறி தொழிலாளர்களை தூண்டிவிட்டுள்ளனர். ஆனால், உண்மை என்ன என்றால், தரமற்ற உணவை சாப்பிட்ட யாரும் சாகவில்லை. லேசான மயக்கத்துடன் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வீடியோ காலில் பேசினார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் அவர்களுடன் பேசினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. உண்மை இவ்வாறு இருக்க, இதை மறைத்து ஒரு பெரிய கலவரத்தை தூண்டும் வகையில் சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி பல மணி நேரம் போராட்டத்தை சாட்டை முருகனும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் தூண்டிவிட்டுள்ளனர்.  இதுதொடர்பாக சாட்டை முருகன் மீது திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, நேற்றிரவு திருச்சி சண்முகநகரில் உள்ள அவரது வீட்டில் சாட்டை முருகனை காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரை இரவோடு இரவாக திருவள்ளூர் தாலுகா காவல்நிலையம் அழைத்து வந்து விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். சாட்டை முருகன் ஏற்கனவே அவதூறு பரப்பியதாக திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வக்கீல் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் ஒரு பெரிய கலவரத்தை தூண்டும் வகையில் தொழிலாளர்களை தூண்டிவிட்டு ஒரே பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளார். இவரது பதிவுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் சாட்டை முருகன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Murugan Tiruvallur Jail , Murugan Tiruvallur Jail closed for spreading false news and inciting riots
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...