×

அதிமுக மாஜி அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் வீடு, அலுவலகம் உள்பட 14 இடங்களில் விஜிலன்ஸ் ரெய்டு.!

சேலம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அதிமுக மாஜி அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 14 இடங்களில் விஜிலென்ஸ் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இந்தச் சோதனை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. அந்த வகையில், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத தங்கம், வெள்ளி நகைகள், வங்கி முதலீடுகள், சொத்து ஆவணங்கள், காப்பீடு நிறுவனங்களில் முதலீடு உள்பட ஏராளமான ஆவணங்கள் சிக்கியது.

இதேபோல், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநில தலைவரும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும், ஜெயலலிதா பேரவையின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான இளங்கோவன், தனது பதவிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வந்த புகாரின்பேரில், கடந்த அக்டோபர் 22ம் தேதி அவர் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவின் அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான தங்கமணி, தனது பதவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக 4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் எதிரொலியாக கடந்த 15ம் தேதி தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு, நண்பர்களின் வீடுகள், தொழிற்சாலைகள், பினாமிகளின் வீடு என்று 69 இடங்களில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ₹2,16,37,000, தங்க நகைகள் 1.130 கிலோ, 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் செல்போன்கள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக (லாக்கர்) சாவிகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. விரைவில் லாக்கர்களை திறந்து பார்க்கவும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தங்கமணிக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் வீடு, அலுவலகங்களில் இன்று காலை 6 மணி முதல் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 14 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

இதில், சேலம் திருவாக்கவுண்டனூரிலுள்ள அரசு ஒப்பந்ததாரரும், தங்கமணியின் நெருங்கிய நண்பருமான குழந்தைவேலுவின் மகன் தொழிலதிபரான மணிகண்டனின் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இங்கு, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் காலை 6 மணி முதல் ரெய்டு நடந்து வருகிறது. இதேபோல், நாமக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் தீபன்சக்கரவர்த்தி, பொத்தனூரை சேர்ந்த தொழிலதிபர் சண்முகம், கோழிப்பண்ணை அதிபர் மோகன், பொன்னேரி தொழிலதிபர் அசோக்குமார், கொல்லிமலை தொழிலதிபர் பெரியசாமி, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள னிவாசா கோழிப்பண்ணை தொழில் சார்ந்த நிறுவனம், பள்ளிபாளையம் டவுன் பகுதியில் காவேரி ஆர்.எஸ்.ரோடு கிருஷ்ண வேணி பஸ் ஸ்டாப் அருகேயுள்ள தங்கமணியின் நெருங்கிய உறவினரான ஆடிட்டர் செந்தில்குமாரின் பழைய மற்றும் புதிய அலுவலகம், பரமத்திவேலூரை அடுத்துள்ள கருங்கல்பட்டியில் உள்ள எஸ்எம்என் கோழிப்பண்ணையில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இதில் ஆடிட்டர் செந்தில்குமாரின் வீட்டுக்கு இன்று காலை 6.30 மணியளவில் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை அவரின் அலுவலகத்துக்கு அழைத்து வந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் தங்கமணியின் கணக்குகளை பார்ப்பதாக கூறப்படுகிறது. பொத்தனூரை சேர்ந்த சண்முகம் என்பவர் சிமெண்ட் பைப் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நீரேற்று பாசன குத்தகைத்தாரராக இருந்து வரும் இவர், பொத்தனூர் காவிரியில் இருந்து சுமார் 20 கிமீ தூரம் வரை நீரேற்று திட்டம் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று கொடுத்து வருகிறார். சேலம், கோவை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 50 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோடு மாநகரில் ஈரோடு சத்தி ரோடு அருகே உள்ள சந்தான் காடு பகுதியில் குமார் (எ) கோபாலகிருஷ்ணன் வீடு, வில்லரம்சம்பட்டி அருகே உள்ள ஒண்டிக்காரன்பாளையம் ஐஸ்வர்யா கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தங்கமணியின் மகன் கல்லூரி நண்பரான செந்தில்நாதன் வீடு, செங்கோடம்பள்ளம் அருகே சக்தி நகரில் உள்ள பாலசுந்தரம் வீடு ஆகிய 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

கோபாலகிருஷ்ணன் வீட்டில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரும், செந்தில்நாதன் வீட்டில் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரும், பாலசுந்தரம் வீட்டில் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பல தொழிலதிபர்கள், தங்கமணிக்கு நெருங்கிய உறவினர்களாக உள்ளனர். அவர்களை பினாமிகளாக கொண்டு தங்கமணி நடத்தும் தொழில்கள் குறித்த ஆவணங்கள், கடந்த 15ம் தேதி நடந்த ரெய்டில் சிக்கியுள்ளது. இதன் எதிரொலியாகவே இன்று தொழிலதிபர்களை குறிவைத்து ரெய்டு நடந்து வருகிறது என்று போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த ரெய்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழில்களில் தங்கமணியின் முதலீடு குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags : AIADMK ,minister ,Thangamani , Vigilance raids 14 places, including the house and office of businessmen close to AIADMK ex-minister Thangamani.
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...