எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு..!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இந்த மசோதா வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வழிவகை செய்கிறது. இந்த மசோதாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சிகள், அறிமுக நிலையிலேயே மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கிரண் ரிஜிஜு மசோதாவை தாக்கல் செய்தார். இதுகுறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஆதார் இருப்பிடத்துக்கான அடையாளமாக மட்டுமே கருதப்படுகிறது. அது குடியுரிமைக்கான அடையாளம் கிடையாது.

வாக்காளர்களிடம் ஆதார் விவரங்களை கேட்கும் போது, இருப்பிடம் தொடர்பான விவரங்களை பெறுகிறீர்களே அன்றி, குடியுரிமை தொடர்பான விவரங்களை அல்ல. இதன் மூலம் குடியுரிமை அற்றோருக்கு வாக்குரிமை வழங்க வழி செய்கிறீர்கள் என்று சாடினார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.

Related Stories: