சிங்காநல்லூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்கள் வேறு பகுதிகளுக்கு சென்றால் வாடகையை வாரியமே ஏற்கும்-அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோவை :  கோவை சிங்காநல்லூர் வீட்டு வசதி  வாரிய குடியிருப்பில் உள்ள மக்கள் வேறு பகுதிக்கு சென்றால் அவர்களுடைய வாடகையை வீட்டு வசதி வாரியமே ஏற்கும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே ஹவுசிங் யூனிட்டில் 960 வீடுகள் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதற்கிடையே, இந்த வீட்டின் உரிமையாளர்கள் புதிய வீடுகள் கட்டித்தர அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், மோசமான நிலையில் உள்ள இந்த அடுக்குமாடி வீடுகளை தமிழக வீட்டு வசதிவாரியத்துறை அமைச்சர் முத்துச்சாமி ஏற்கனவே ஆய்வு செய்தார். மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி, அவரின் ஆலோசனைபடி புதிய வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. குடியிருப்பு உரிமையாளர்களிடம் பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு, இந்த ஹவுசிங் யூனிட் குடியிருப்பு இடத்தை வீட்டு உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனம் மற்றும் ஹவுசிங் போர்டு என 3 ஆக பிரிக்கப்பட்டு, இவர்களது இடத்தில் தரமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வீட்டு உரிமையாளர்களிடத்தில் கருத்துகளும் கேட்கப்பட்டது. இந்நிலையில்,  சிங்காநல்லூர்  ஹவுசிங் யூனிட் அடுக்குமாடி வீடுகள் நேரில் ஆய்வு செய்த வீட்டு வசதிவாரியத்துறை அமைச்சர் முத்துசாமி, இங்கு அமைய உள்ள புதிய அடுக்குமாடி வீடு தொடர்பாகவும், மக்களிடம் கருத்துக்களை கேட்டு, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சிங்கநல்லூர் குடிசை மாற்று வாரிய பகுதியில் 960 வீடுகள் உள்ளன. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வீடுகள் மோசமான நிலையில் உள்ளது. எனவே, வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இங்கு மேற்கொள்ளப்படும் பணிகளை கவனிக்க இந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள நபர்களில் 22 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் மிகவும் தரமாக இருக்கும் அனைத்து விதமான அடிப்படை வசதிகள் மற்றும் பொதுவான வசதிகள் என அனைத்தும் ஏற்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 400 சதுர அடி, 600 சதுர அடி, 800 சதுர அடி என குடியிருப்புவாசிகள் தனித்தனியாக உள்ளனர்.

தற்போது இவர்களுக்கு ஒரே இடத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் பட்சத்தில் கூடுதலாக சதுர அடி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். ஏற்கனவே, கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை ஆய்வு மேற்கொள்ளப்படும் அதேபோல், தற்போது குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் உறுதியாக தரமானதாக இருக்கும். சிங்காநல்லூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு வாடகைக்கு சென்றால் அவர்களுடைய வாடகையை குடிசை மாற்று வாரியமே ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வீட்டு வசதித்துறை இயக்குனர் ஷீறு, துறை செயலாளர் மக்வானா, மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், பகுதி கழக பொறுப்பாளர் சிங்கை சிவா, வார்டு செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: