இஸ்ரேலில் 5வது கொரோனா அலை தொடங்க வாய்ப்பு!: பிரதமர் நஃப்தாலி பென்னட் அச்சம்..!!

ஜெருசலேம்: இஸ்ரேலில் 5வது கொரோனா அலை தொடங்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட் அச்சம் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது. கொரோனா பரவிய காலம் முதல், உலகில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்கும் நாடுகளில் ஒன்றான இஸ்ரேல், தடுப்பூசி செலுத்தும் பணியை விரைந்து தொடங்கியதுடன் கணிசமான பேருக்கு அதை செலுத்தி முடித்துள்ளது.

அமெரிக்காவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் அந்நாட்டுடனான போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துக்கொள்வது குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நஃப்தாலி பென்னட், தற்போது ஒமிக்ரான் பாதிப்பு குறைவாக இருந்த போதிலும் அது வரும் வாரங்களில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார். இஸ்ரேலில் தற்போது 134 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளது.

307 பேருக்கு அத்தொற்று இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. 5ஆவது கொரோனா அலை பரவல் ஏற்பட்டுவிடுமோ என அச்சம் எழுந்திருக்கிறது என்றார். இதற்கிடையே அமெரிக்காவின் நியுயார்க்கிலும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

Related Stories: