×

பிலிப்பைன்ஸை உருகுலைத்த ‘ராய்’ புயல்... பலி எண்ணிக்கை 208 ஆக உயர்வு;8 லட்சம் மக்கள் பாதிப்பு

மணிலா: பிலிப்பைன்சில் தாக்கிய ‘ராய்’ புயல், போஹல் மாகாணத்தை சின்னாபின்னமாக்கி விட்டது. இதன் கோரத் தாண்டவத்தில் 208 பேர் பலியாகி உள்ளனர். பசிபிக் கடல் பகுதியில் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடுதான் பிலிப்பைன்ஸ். ஆண்டுதோறும் இந்த நாட்டை 20க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்குவது வாடிக்கை. அதேபோல், எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி நடக்கும். கடந்த வாரம் இந்த நாட்டின் மத்திய பிராந்திய மாகாணமான போஹலை ‘ராய்’ என பெயரிடப்பட்ட பயங்கர புயல் தாக்கியது. மணிக்கு 121 கி.மீ. முதல் 168 கி.மீ. வரை சூறாவளி காற்று சூழன்றடித்தது. இதில், இந்த மாகாணமே  சிதைந்து விட்டது. 8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புயலின் கோரத் தாண்டவத்தால் ஏற்பட்ட மழை, வெள்ளம், வீடுகள் இடிதல் போன்ற விபத்துகளில் இதுவரையில் 208 பேர் பலியாகி உள்ளனர். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதால், இந்த மாகாணத்தின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள், உயிர் பலி விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக, இந்த மாகாணத்தின் ஆளுநர் ஆர்துார் யாப் கூறியுள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டட்ரேட் விமானம் மூலம் பார்வையிட்டு, மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். பிலிப்பைன்சின் மத்திய மாகாணங்களில் கடந்த 2013ல் தாக்கிய ‘ஹய்யன்’ புயலால் 6,300 பேர் பலியாகினர்.


Tags : 'Roy ,Philippines , பிலிப்பைன்ஸ்
× RELATED சினிமா பிரபலங்கள், பொதுமக்கள்...