×

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல குவிந்த பெண் ஊழியர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல தனியார் பெண் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று காலை முதல் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு சில தினங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட தரமற்ற உணவால் உடல் உபாதைகள் ஏற்பட்டு பலர் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.

ஆனால், ஒரு சிலர் திரும்பவில்லை எனும் எழுந்த சர்ச்சையால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் நேற்று முன்தினம் மாலை வரை பெண் தொழிலாளர்கள் பாக்ஸ்கான் தொழிற்சாலை அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இதனையெடுத்து மாவட்ட கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து தொழிலாளர்களுக்கு ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டது. இதனால் நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் தங்கள் உடமைகளுடன் சொந்த ஊர்களுக்கு செல்ல காஞ்சிபுரம் பஸ் நிலையத்தை நோக்கி படையெடுத்தனர்.

விழுப்புரம் கடலூர், நாகை திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களுக்கும் செல்ல அதிகளவிலானோர் குவிந்ததால் பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அவர்களின் பாதுகாப்பு கருதி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை ஏற்படுத்தி சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பேருந்து நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.


Tags : Kanhipuram Bus Station , Kanchipuram, bus stand, hometown, female staff
× RELATED சென்னை கிண்டியில் அமைந்துள்ள...