×

சர்வதேச நாடுகள் உடனடியாக செய்ய வேண்டும் ஆப்கான் மக்களுக்கு மனிதாபிமான உதவி: இந்தியா, மத்திய ஆசிய நாடுகள் அழைப்பு

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ராணுவம் வெளியேறிய பிறகு, அங்கு மீண்டும் தலிபான் தீவிரவாத அமைப்பின் ஆட்சி அமைந்துள்ளது. இதை சர்வதேச நாடுகள் பல ஏற்றுக் கொள்ளாததால் ஆப்கானிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், ஆப்கான் நிலவரம் தொடர்பாக இந்தியா, 5 மத்திய ஆசிய நாடுகள் இடையேயான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதில், அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலையான ஆப்கானிஸ்தானுக்கு தங்கள் வலுவான ஆதரவை தெரிவித்த அமைச்சர்கள், போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் உள்விவகாரங்களில் தலையிடாதது ஆகியவற்றை மதிக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், ஐநா தீர்மானத்தின்படி, ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாத செயல்களுக்கு தங்குமிடம், பயிற்சி, திட்டமிடல் அல்லது நிதியுதவி செய்ய பயன்படுத்தப்படக் கூடாது என்றும் கூட்டறிக்கை வெளியிட்டனர். சர்வதேச சமூகமும், ஐநாவும் ஆப்கான் மக்களுக்கு வேண்டிய மனிதாபமான உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.

30 முஸ்லிம் நாடுகள் ஆதரவு
ஆப்கான் நிலவரம் தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டம், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்தது. இதில், 30 முஸ்லிம் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், ஐநா பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதில், ஆப்கானுக்கு உலக சமூக மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், ‘‘ஆப்கானிஸ்தானுக்கு கூட்டாக உதவிக்கரம் நீட்ட வேண்டிய நேரம் இது. இதை உலகம் செய்யவில்லை என்றால், ஆப்கானில் குழப்பம் ஏற்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கை ஓங்கி உலகளாவிய தீவிரவாதம் அதிகரிக்கும் ஆபத்து ஏற்படும்,’’ என்றார்.

Tags : India ,Central Asia , International, Afghan people, humanitarian aid, Central Asian countries
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!