மகாராஷ்டிராவில் 250 நாய் குட்டிகளை கொன்ற குரங்குகள்: குட்டியை கடித்துக் கொன்றதால் பழிக்குப் பழி

பீட்: குட்டிக் குரங்கை தெருநாய் ஒன்று கடித்துக் கொன்றதால் ஆத்திரம் அடைந்த 2 குரங்குகள், தெரு நாய்களை குறிவைத்து வேட்டையாடியது பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வன உயிரினங்கள் பழிக்குப் பழி வாங்கும் சம்பவங்கள் பலவற்றை கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது, இதே போன்ற ஒரு சம்பவம், மகாராஷ்டிர மாநிலம் பீட் பகுதியில் நடந்துள்ளது. பீட் மாவட்டம் மஜல்கான் அடுத்த லாவூல் கிராமத்தில், ஏராளமான குரங்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக தெருவில் காணும் நாய்க்குட்டிகளை எல்லாம் தூக்கிக் கொண்டு ஓடி விடுகின்றன. பின்னர், உயரமான கட்டிடம் அல்லது மரத்தின் மீது ஏறி, நாய்க்குட்டிகளை வீசி எறிந்து கொன்று விடுகின்றன.

இதுபோல் ஒன்றல்ல, இரண்டல்ல... இதுவரை சுமார் 250 நாய்க்குட்டிகளை குரங்குகள் கொன்று விட்டதாக, லாவூல் கிராம மக்கள் கூறுகின்றனர். நாய்க்குட்டிகளை கொன்ற குரங்குகள், அடுத்ததாக குழந்தைகள் மீதும் கைவைக்க துவங்கின. வளர்ப்பு நாய்க்குட்டிகளை குரங்குகள் தாக்கியதால், அவற்றை கிராம மக்கள் காப்பாற்ற முயன்றனர். இதனால், அவர்கள் மீதும், சிறுவர்கள் மீதும் குரங்குகள் பதில் தாக்குதல் நடத்த தொடங்கின. குழந்தைகளை தரதரவென இழுத்துச் சென்றன.  இதனால் கிராம மக்கள் பெரும் பீதி அடைந்தனர். குரங்குகளை எவ்வளவு முயன்றும் விரட்ட முடியவில்லை. இது குறித்து வனத்துறைக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

உடனே, நாக்பூர் வனத்துறையில் இருந்து ஒரு குழுவினர், தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 2 குரங்குகளையும் பிடித்து, நாக்பூர் அருகே வேறொரு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டு விட்டு வந்தனர். இதனால், கிராம மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

பட்டையை கிளப்பிய மீம்ஸ்கள்

குரங்குகள் நாய்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தால், சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வலம் வருகின்றன. மிக்கி மவுஸ் மற்றும் ஹாலிவுட் சினிமா காட்சிகளை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி தெறிக்க விட்டுள்ளனர். சில மீம்ஸ்களில், தானியங்கி துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு குரங்குகள் மிரட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Related Stories: