வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு தேர்தல் சீர்த்திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் சீர்த்திருத்தங்களை செய்வதற்கான. ‘தேர்தல் சட்ட திருத்த மசோதா -2021’, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஒரே வாக்காளர் நாட்டின் பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை தடுக்கவும்,  போலி வாக்காளர்களை நீக்கவும், கள்ள ஓட்டுகளை  தடுக்கவும், தேர்தல் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்யும்படி ஒன்றிய அரசிடம் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த கோரிக்கைக்கு ஒன்றிய அரசு தற்போது செவிசாய்த்துள்ளது.

இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள, ‘தேர்தல் சட்ட திருத்த மசோதா -2021’,க்கு ஒன்றிய அமைச்சரவை சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், முறைகேடுகளை தடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன்  ஆதார் எண் இணைக்கப்பட உள்ளது. மேலும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களுக்கு தற்போதுள்ள ஒரு முறைக்கு பதிலாக, ஆண்டுக்கு 4 முறை வாக்காளர் பட்டியலில் சேர வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை தற்போது நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால தொடரிலேயே நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக, மக்களவையில் இன்று இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்காக பட்டியலிடப்பட்டு உள்ளது. மேலும், இதன் மீதான விவாதத்துக்காக மசோதாவின் நகல், அனைத்து கட்சி எம்பி.க்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் சட்டத் திருத்த மசோதாவின் மூலம், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் சேர 4 முறை விண்ணப்பிக்க முடியும்.

Related Stories: