தென்காசி பகுதியில் பள்ளியில் ஆய்வுக்கு சென்ற கல்வி அதிகாரிக்கு கிரீடம், மாலை அணிவித்து வரவேற்பு: சமூக வலைதளங்களில் வைரல்

கடையம்: பள்ளியில் ஆய்வு பணிக்கு சென்ற தென்காசி மாவட்ட கல்வி அதிகாரிக்கு கிரீடம், மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக சுடலை என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019ம் ஆண்டு மாவட்ட கல்வி அலுவலராக பணியை தொடங்கினார். இதனையடுத்து அவர் சேரன்மகாதேவி மற்றும் திருநெல்வேலி கல்வி மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார். கடந்த 14ம் தேதி கடையத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு வருடாந்திர ஆய்வு பணிக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பூக்களால் ஆன கிரீடம் மற்றும் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பளித்தனர்.

 அப்போது கிரீடம் மற்றும் மாலை அணிந்தவாறே பதிவேட்டில் கையெழுத்திடுவது போன்று புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் நெட்டிசன்கள், அதிகாரியை கடவுள் போல சித்தரிக்கிறார்கள் ஏன்? என பலர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதுபற்றி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை கூறுகையில், ‘‘எனக்கு இதுபோன்ற வரவேற்பு வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் இதனை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தினர். எனவே நான் அதனை ஏற்றுக் கொண்டேன்’’ என்றார்.

Related Stories: