×

வேலூரில் பிரபல நகைக்கடையில் 15.5 கிலோ நகை கொள்ளை வாலிபர் உட்பட 15 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை: 100க்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் ஆய்வு

வேலூர்: வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் 15.5 கிலோ நகை கொள்ளை வழக்கில் வாலிபர் உட்பட 15 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ேவலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 14ம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு புகுந்து 15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. காவல்துறை வௌியிட்ட வீடியோவில் மர்ம ஆசாமி ஒருவர் சிங்க முகமூடி அணிந்து நுழைந்து கடையில் உள்ள கேமராக்களில் பெயின்ட் ஸ்பிரே அடித்த காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த மர்மநபரை அடையாளம் காண பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குறிப்பிட்ட நேரத்தில் பதிவான செல்போன் சிக்னல்களையும் பட்டியலிட்டு சைபர் கிரைம் மூலம் விசாரணையை தொடங்கினர். அப்போது 100க்கும் மேற்பட்ட செல்போன் எண்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில் சில சந்தேகத்திற்குரிய அழைப்புகள் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை கொண்டு விசாரணை நடத்தியதில், இந்த கொள்ளை வழக்கில் வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அடுத்த குச்சிப்பாளையத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று பிடித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 15 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் ஏற்கனவே வேறு திருட்டில் ஈடுபட்டவர்களா?  காவல் நிலையங்களில் வழக்கு உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக குச்சிப்பாளையத்தை சேர்ந்த நபர் நகைகளை கொள்ளையடித்து எங்காவது பதுக்கி வைத்துள்ளாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த நபருடன் கடந்த 14ம் தேதி செல்போனில் பேசியவர்களையும் பட்டியலிட்டு தனிப்படையினர் விசாரிக்கின்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொள்ளை வழக்கில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்’’ என்றனர்.

திருப்பூருக்கு தனிப்படை விரைந்தது
பிடிபட்ட வாலிபர் வசிக்கும் குச்சிப்பாளையம் கிராமத்துக்கு அருகிலுள்ள கருங்காலி கிராமத்தை சேர்ந்தவரிடம் அவர் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து கருங்காலி கிராமத்தை சேர்ந்தவரின் குடும்பத்தினரிடம் வேப்பங்குப்பம் காவல்நிலையத்தில் நேற்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ‘‘குச்சிப்பாளையத்தை சேர்ந்த நபரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறோம். இதுதொடர்பாக அவர் அடிக்கடி செல்போனில் பேசினார். தற்போது கண் அறுவை சிகிச்சைக்காக எங்களது குடும்ப உறுப்பினர் திருப்பூருக்கு சென்றுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஒரு தனிப்படை திருப்பூருக்கு விரைந்துள்ளது.

ஒடுகத்தூரில் சிசிடிவி பதிவுகள் ஆய்வு
வேலூர் நகை கடையில் கொள்ளையடிக்க சிங்க முகமூடி அணிந்து உள்ளே புகுந்த வாலிபர் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஒடுகத்தூர் பகுதியில் தங்கியிருந்ததாக தனிப்படை போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது. இதனால் தனிப்படை போலீசார் ஒடுகத்தூர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எங்கே எல்லாம் உள்ளது என்பது குறித்து அதனை பட்டியலிட்டு அந்த பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Vellore , Jewelry, jewelry robbery, police, investigation,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...