பள்ளிபாளையத்தில் பரபரப்பு 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக இளம்பெண் புகார்: பீகார் தொழிலாளர்களை பிடித்து விசாரணை

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த வெப்படையில் நூற்பு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தங்கி, ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இதே நூற்பாலையில் வேலை செய்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த பால்ராஜ்(24) என்ற தொழிலாளியுடன், இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை, பால்ராஜ் அங்குள்ள அறை ஒன்றில் வைத்து, அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அதன் பின்னர், தனது நண்பர்கள் பிரதீப்குமார், மனோஜ்குமார் ஆகியோரையும் அழைத்து, மூவரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மயங்கிய நிலையில் கிடந்த இளம்பெண்ணை, அறையிலேயே விட்டு விட்டு, மூவரும் தப்பி ஓடிவிட்டனர். மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண், நடந்த சம்பவம் குறித்து ஆலையின் மேற்பார்வையாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த ஆலோசனையின்படி, இது குறித்து வெப்படை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட புகார், திருச்செங்கோடு மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இதுதொடர்பாக அந்த ஆலையில் பணி புரிந்து வரும் பீகார் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: