8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதி

தென்காசி: சுமார் 8 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.  தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களின் மனம் கவர்ந்த சுற்றுலா தலமான குற்றாலத்தில் கடந்த ஆண்டு கொரோனா அலை முதன் முறையாக பரவியபோது அருவிகள் மூடப்பட்டன. அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது கடும் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2வது அலை பரவியதன் காரணமாக ஏப்ரல் மாதம் 16ம் தேதி முதல் குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

 இந்நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெயினருவியில் ஒரே சமயத்தில் 10 ஆண்களும், 6 பெண்களும் ஐந்தருவியில் 10 ஆண்களும் 10 பெண்களும் குளிக்க அனுமதிக்கப்படுவர். பழைய குற்றால அருவியில் ஒரே சமயத்தில் 5 ஆண்களும் 10 பெண்களும் குளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு அருவிகளில் குளியலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும் குற்றாலம் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது மெயினருவியில் ஆண்கள் பகுதியில் தண்ணீர் சுமாராகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலத்திலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. புலி  அருவியில் ஒரு பிரிவில் நன்றாகவும், ஒரு பிரிவில் குறைவாகவும் மற்றொரு பிரிவில் தண்ணீர் இன்றியும் காணப்படுகிறது.

Related Stories: