தமிழகத்தில் 4,556 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்? ஆணையர் குமரகுருபரன் தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4,556 கோயில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்வது தொடர்பாக ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,288 கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் வருவாய் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. இக்கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால், கோயில்களின் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதிலும், வரவு-செலவு கணக்குகளை கவனிப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று 2019ல் உத்தரவிட்டது. எனினும்,  அதிமுக ஆட்சிகாலத்தில் அறநிலையத்துறை சார்பில் மாவட்ட குழு அமைத்ததே தவிர தொடர்ந்து அறங்காவலர் குழுவை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பரம்பரை அறங்காவலர்கள் இல்லாத கோயிலுக்கு அறங்காவலர் நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பெரிய கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கான பட்டியல் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் அந்த கோயில்களில் நியமனம் செய்யப்படவுள்ள அறங்காவலர்கள் தொடர்பான விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் வரும் கோயில்களில் மாவட்ட குழுக்களின் பரிந்துரையில் பேரில் 3 அறங்காவலர் குழுவை உதவி ஆணையர் அறிவிப்பார். ரூ.2 லட்சம் வரை வருமானம் வரும் கோயில்களில் மாவட்ட குழுவில் 3 பேர் கொண்ட குழுவை இணை ஆணையர் நியமிக்கிறார்.

அதே போன்று ரூ.10 லட்சத்துக்கு மிகாமல் வருமானம் வரும் கோயில்களில் மாவட்ட குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் 3 பேர் கொண்ட குழுவை ஆணையர் நியமனம் செய்கிறார். எனவே, எந்தெந்த கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்யலாம் என்பது தொடர்பான விவரங்களை அனுப்புமாறு அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அறநிலையத்துறையில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக இத்துறை ஆளுகைக்கு உட்பட்ட கோயில்களில் சட்டப்பிரிவு 46 (i), 46 (ii), 46 (iii) வகை சார்ந்த கோயில்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: