பத்திரப்பதிவால் ஏற்படும் இழப்பை தடுக்கும் வகையில் இணைய வழி தணிக்கை விரைவில் அமல்: பதிவுத்துறை உயரதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, அதற்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டணம் அரசு நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், சில சார்பதிவாளர்கள் தங்களது இஷ்டத்திற்கு தகுந்தாற் போல் கட்டணம் வசூலிப்பதாக  கூறப்படுகிறது. இதனால், அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதாக தெரிகிறது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மாவட்ட பதிவாளர்கள் முறையாக ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை தரவில்லை.

குறிப்பாக, 3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை சார்பதிவாளர் அலுவலகங்களில் தணிக்கை செய்ய வேண்டும்.  ஆனால், அவ்வாறு தணிக்கை செய்யப்படாததால் ஒரு சில சார்பதிவாளர் அலுவலகங்களில், தொடர்ந்து வழிகாட்டி மதிப்பை குறைத்து பத்திரம் பதிவு செய்யப்பட்டு வந்தன. இதனால், அரசுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.இந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டார். மேலும், ஒவ்வொரு பதிவுக்கும் முறையாக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தருகின்றனர்.

இவ்வாறு சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரில் ஆய்வுக்கு பதிவாளர்கள் செல்வதால் பல நேரங்களில் அறிக்கை தருவதில் சிக்கல் இருக்கிறது. இந்த நிலையில் பதிவுத்துறையில் தணிக்கை  செய்யும் பணியினை கணினிமயமாக்க பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திட்டமிட்டார். இதை தொடர்ந்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் சார்பில் தணிக்கை வேலையை கணினிமயாக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி முதற்கட்டமாக கணினி வழியாக எப்படி தணிக்கை செய்வது என்பது தொடர்பாக சார்பதிவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன. தொடர்ந்து கணினி வழியாக தணிக்கை செய்யும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் அலுவலகத்தில் இருந்து சரியான மதிப்பை நிர்ணயித்து கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதா என்பதை தணிக்கை செய்து, அதற்கான அறிக்கையை உடனடியாக அனுப்ப முடியும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: