×

நூற்றாண்டு விழாவையொட்டி நந்தனத்தில் பேராசிரியர் க.அன்பழகன் வளாகம் திறப்பு: உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டி அவரது சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ‘இனமான பேராசிரியர்’ என்று கலைஞரால் பெருமிதத்தோடும், பேரறிஞர் அண்ணாவால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும் அழைத்துப் போற்றப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன். 1962ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 ஆண்டு தொடங்கி 1971ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார்.


கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் மக்கள் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றினார். இந்தநிலையில், பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளில் அவரின் அருமைப் பெருமைகளை போற்றிப் பாராட்டுகின்ற வகையில், நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ என பெயர் சூட்டி தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, நூற்றாண்டு விழாவின் தொடக்க நாளான நேற்று காலை 10 மணியளவில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து 1,20,000 சதுர அடியில் இயங்கி வரும் இந்த வளாகத்திற்கு ‘‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என்று பெயர் சூட்டினார். பின்னர், க.அன்பழகனின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகைக்கான காசோலையினை பேராசிரியரின் மகன் அன்புச்செல்வன் மற்றும் அவரது பேரனும் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றி அழகன் ஆகியோரிடம் வழங்கினார். இந்தநிகழ்ச்சியில். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை வளாகத்தில், கருவூல கணக்குத் தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம், மாநில, உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தணிக்கை அலுவலகங்கள் மற்றும் அரசு சிறுசேமிப்புத் துறை உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் க.அன்பழகனின் இல்லத்திற்கு முதல்வர் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியரின் உருவப்படத்திற்கு மலர்தூவி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர், அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட பேராசிரியர் க.அன்பழகனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags : Prof. ,K. Anpalagan ,Opening ,Nandana ,Centenary ,Chief Minister ,MK Stalin , Prof. K. Anpalagan Campus Opening at Nandana on the occasion of Centenary: Chief Minister MK Stalin unveiled the statue
× RELATED கவுன்சலிங் ரூம்