×

ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து தலைமறைவு; அதிமுக விஐபிகளின் 600 செல்போன்கள் கண்காணிப்பு.! சைபர் கிரைம் உதவியுடன் தனிப்படை தேடுதல் வேட்டை

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்படும் மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜியுடன், முன்னாள் அமைச்சர்கள் உட்பட அதிமுகவின் முக்கிய புள்ளிகள் சிலர் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு சொந்தமான 600க்கும் மேற்பட்ட செல்போன்களுக்கு வரும் அழைப்புகள் அனைத்தும் சைபர் கிரைம் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர், விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன், தனது சகோதரி மகன் ஆனந்திற்கு, விருதுநகர் ஆவின் மேலாளர் வேலை வாங்கி தருவதற்கு ரூ.30 லட்சத்தை முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் தம்பியான விஜயநல்லதம்பியிடம் அளித்துள்ளார். ஆனால், அவர் ஆவினில் வேலை வாங்கி தராததை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த நவ.15ல் ரவீந்திரன் புகார் அளித்தார். இதன்பேரில் விஜயநல்லதம்பியை பிடித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விஜயநல்லதம்பி, ரவீந்திரன் உட்பட பலரிடம் ஆவினில் வேலை வாங்கி தருவதற்காக ரூ.3 கோடி வரை பெற்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரின் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்டோரிடம் கொடுத்ததாக தெரிவித்தார். இதன் பேரில் 4 பேர் மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளில் தன்னை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த முன்ஜாமீன் மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ராஜேந்திர பாலாஜி, தலைமறைவானார். அவரை கைது செய்ய மாவட்ட எஸ்பி மனோகர், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் அக்கா மகன்கள் வசந்தகுமார்(38), ரமணா(34) மற்றும் கார் டிரைவர் ராஜ்குமார்(47) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  

பின்னர் மூவரிடம் வாக்குமூலம் பெற்று அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, இன்பத்தமிழன் உள்பட அதிமுக நிர்வாகிகள், பிரமுகர்களிடம் விசாரணை செய்து கண்காணித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தற்போது பதுங்கியுள்ள இடத்தை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. அவரது செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது ஆதரவாளர்களின் செல்போன்கள் மூலம் முன்னாள் அமைச்சர்கள் உட்பட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார் என்று தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் 600க்கும் மேற்பட்ட செல்போன்களின் நம்பர்களை தனிப்படை போலீசார் சேகரித்து, அவற்றை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் அந்த எண்களில் இருந்து செல்லும் அழைப்புகளையும், வரும் அழைப்புகளையும் கண்காணித்து வருகின்றனர். ராஜேந்திரபாலாஜி மதுரையில் தனது ஆதரவாளர் ஒருவர் வீட்டில் பதுங்கியுள்ளார் என்று கிடைத்த தகவலையடுத்து, தனிப்படை போலீசாரின் ஒரு பிரிவினர் மதுரையில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே அவரது சார்பில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவை, அவசர மனுவாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது வக்கீல்கள் முறையிட உள்ளனர். அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அதிமுகவின் விவிஐபி ஒருவர், ராஜேந்திரபாலாஜிக்கு நம்பிக்கை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Rajendrapalaji , Rajendrapalaji continues to disappear; 600 cell phones tracking of AIADMK VIPs! Personal search hunt with the help of cyber crime
× RELATED ரூ.3 கோடி மோசடியில் தலைமறைவான...