சிவகாசி அருகே சேதமான பள்ளிக்கட்டிடத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டிருந்ததால், அப்பள்ளி கட்டிடம் சீல் வைக்கப்பட்டது. திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியானர். இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் தரம் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் சிவகாசி அருகே திருத்தங்கல் எம்.ஜி.ஆர் காலனியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் ராஜகுமார் நேற்று ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்த பள்ளி மாணவர்கள் சேதமடைந்த கட்டிடத்தில் அமர்ந்து படிப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு அக்கட்டிடம் சீல் வைக்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்களை வேறு இடத்திலுள்ள கட்டிடத்தில் வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து தாசில்தார் ராஜகுமார் கூறுகையில், `` சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடர் ஆய்வு நடத்தப்படும்’’ என்று கூறினார்.

Related Stories: