×

எலச்சிப்பாளையம் அருகே கோமாரி நோய் சிறப்பு முகாமில் 300 கால்நடைகளுக்கு தடுப்பூசி

திருச்செங்கோடு: எலச்சிப்பாளையம் அருகே நடைபெற்ற சிறப்பு முகாமில், ஒரேநாளில் 300 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது. திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் ஒன்றியம், மாரப்பம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை பணிகள், குடற்புழு நீக்க மருந்துகளை கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு அளித்தல், கருவூட்டல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

சிறந்த முறையில் கன்றுகள் பராமரிப்போருக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் முன்னோடி கால்நடை வளர்க்கும் சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு சிறப்பு மேலாண்மை விருதுகள் வழங்கப்பட்டன. முகாமில் எலச்சிப்பாளையம் அட்மா திட்ட தலைவர் தங்கவேல் கலந்து கொண்டு பேசினார். கோமாரி நோய் தடுப்பூசி பணிகளை சென்னை டாக்டர் சுந்தரேசன் கள ஆய்வு செய்தார். நாமக்கல் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

முகாமில் கால்நடை டாக்டர்கள் புஷ்பா, செந்தில்குமார், பாலாஜி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், தடுப்பூசி பணியாளர்கள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தினர். கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு, சிறப்பு முகாம்களை கால்நடை வளர்ப்போர் சரியான முறையில் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.


Tags : Elachipalayam , Vaccination of 300 cattle at a special camp for syphilis near Elachipalayam
× RELATED சாலைப் பணிக்கு பூமி பூஜை