×

குஜிலியம்பாறை அருகே சிதிலமடைந்த நிலையில் அச்சுறுத்தும் அங்கன்வாடி மையக் கட்டிடம்: சுவர்களில் விரிசல்: பெயர்ந்து விழும் மேற்கூரை பூச்சு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே, சிதிலமடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜிலியம்பாறை அருகே, பல்லாநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம் (அங்கன்வாடி) உள்ளது. 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஆசிரியை மற்றும் சமையலர் என 2 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் பராமரிப்பு இல்லாமல், கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மையத்தில் பொருட்கள் வைக்கும் இருப்பு அறை மற்றும் சமையல் அறையில் காங்கிரீட் மேற்கூரை பெயர்ந்துள்ளது. இதனால், கம்பிகள் வெளியே தெரிகின்றன. குழந்தைகள் அமர்ந்து சாப்பிடும் அறையின் மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் உடைந்த நிலையில் உள்ளது. பக்கவாட்டுச் சுவரும் இடிந்த நிலையில் உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் கட்டிடம் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது அங்கன்வாடி குழந்தைகளுக்கு பள்ளி திறக்கப்படவில்லை. எனவே, சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டி தருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

கர்ப்பிணிகள் அச்சம்
கர்ப்பிணி பெண்கள் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்தல், ஊட்டச்சத்து பொருட்கள் வாங்கிச் செல்தல், மருத்துவ ஆலோசனை பெறுதல் ஆகியவற்றிற்கு இந்த மையத்திற்கு வந்து செல்கின்றனர். கட்டிடம் சேதமடைந்த நிலையில், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் ஒருவித உயிர் பயத்துடன் வருகின்றனர்.

Tags : Anganwadi Center ,Kujiliampara , Anganwadi Center building in dilapidated condition near Kujiliampara: cracks in the walls: shifting roof coating
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்