×

நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகம் பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை என பெயர் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: ‘இனமான பேராசிரியர்’ என்று கலைஞரால் பெருமிதத்தோடும், பேரறிஞர் அண்ணாவால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும் அழைத்துப் போற்றப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன்.  1962ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 ஆண்டு தொடங்கி 1971ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தொடர்ந்த 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார். 1942ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில்தான் பேராசிரியர் க.அன்பழகனாருக்கும், கலைஞருக்கும் முதல் அறிமுகம் ஏற்பட்டது.

அன்று தொடங்கிய அந்த நட்பு 75 ஆண்டு காலம் இணைபிரியாத உயரிய நட்புக்கு இலக்கணமாகும். ‘நாங்கள் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்’ என்று மகிழ்ச்சி பொங்கிட குறிப்பிட்டு மகிழ்ந்தவர் கலைஞர். முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து, பேராசிரியர் “என் அன்புக்குரிய தம்பி மு.க.ஸ்டாலின் தந்தையைப் போலவே உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதையேத்  தாரக மந்திரமாகக் கொண்டவர். மக்கள் பணியில் சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக பணியாற்றிப் படிப்படியாக உயர்ந்து உச்சம் தொட்டவர். காலமும் கடமையும் என்றும் தவறாதவர்.

சட்டமன்றத்தில் புள்ளி விவரத்துடன் திறம்படப் பதில் அளிப்பதில் என்றுமே சளைக்காதவர்” என்று பாராட்டி மகிழ்ந்தவர் ஆவார்.பேராசிரியரின்  நூற்றாண்டு பிறந்த நாளின் தொடக்க நாளான இன்று அவரின் அருமைப் பெருமைகளை போற்றிப் பாராட்டுகின்ற வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தனம் ஓருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியரின் சிலையினைத் திறந்து வைத்து, ஏறத்தாழ 1,20,000 சதுர அடியில் இயங்கி வரும் இந்த வளாகத்தில், கருவூல கணக்குத் தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம், மாநில, உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தணிக்கை அலுவலகங்கள் மற்றும் அரசு சிறுசேமிப்புத் துறை உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கிவரும் இவ்வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என்று பெயர் சூட்டியும், நாட்டுடமையாக்கப்பட்டுள்ள அவரின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையினையும் குடும்பத்தாருக்கு  வழங்கி சிறப்பிக்க உள்ளார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nandanam Integrated Finance Complex ,Prof. ,K. Anpalagan Maligai ,Government of Tamil Nadu , Nandanam, Finance Department Campus, Professor, K. Anpalagan, Government of Tamil Nadu
× RELATED கவுன்சலிங் ரூம்