×

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய கட்டாய அனுமதி வேண்டும்: ஒன்றிய அரசுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் கடிதம்

சென்னை: அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறைச் செயலாளருக்கு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இதுவரை 28 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 4 பேர் மட்டுமே பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் மீதமுள்ள 24 பேர் குறைவான பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாகவும் உள்ளனர்.

ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு 48 மணி நேரத்தில் ஒமிக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இது ஒமிக்ரான் மிக வேகமாக பரவும் தன்மையை காட்டுகிறது. தற்போது வரை ஒமிக்ரான் அதிகம் பாதிப்புள்ள பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து வருவோருக்கு எவ்வித தீவிர கட்டுப்பாடுகளும் இல்லாமல் உள்ளது. ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களில் வெறும் 2 சதவீதம் பேருக்கும் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் ஒமிக்ரான் பரவலை தடுக்க முடியாது, பரவல் அதிகரிக்கக் காரணமாகிவிடும்.

அதனால் அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த ஒன்றிய சுகாதாரத்துறை அனுமதிக்க வேண்டும். அதைப்போன்று கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்தால் மட்டுமே விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும், ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்துக்கு மாறுவதாக இருந்தால் கூட நெகடிவ் முடிவு அவசியமாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு நெகடிவ் என்றால் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின் 8-ம் நாள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் தொற்று உறுதியானால் ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி சிகிச்சை வழங்க வேண்டும். நெகடிவ் என்றால் மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Director of Public Health ,United ,States , Overseas, Corona Experiment, United States, Director of Public Health
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!