×

ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தினமும் 15 லட்சம் பேரை கொரோனா தாக்கும்? ஒமிக்ரான் வேகமாக பரவுவதால் எச்சரிக்கை

புதுடெல்லி: ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தினமும் 15 லட்சம் பேரை கொரோனா வைரஸ் தாக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஒமிக்ரான் வேகமாக பரவுவதால் முன் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 113 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் ஒமிக்ரான் அறிகுறியுடன் நூற்றுக் கணக்கானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஒமிக்ரான் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

குளிர்காலம் தொடங்கியவுடன் இந்தியாவில் தொற்று பரவல் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அடிக்கோடிட்டுக் காட்டி வருகின்றனர். இதுகுறித்து கொரோனா தடுப்பு குழுவில் அங்கம் வகிக்கும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறுகையில், ‘ஒமிக்ரான் மாறுபாடுடன் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் தேவையின்றி மக்கள் வெளியில் செல்ல வேண்டாம். ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரானின் தாக்கம் அதிகமாகி உள்ளது. இங்கிலாந்தில் அதிகளவு தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட 80,000க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் (வியாழன்) மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள நிலைமையுடன் இந்தியாவை ஒப்பிட்டு பார்க்கும் போது, ஒவ்வொரு நாளும் 14 லட்சம் பேர் தொற்றால் பாதிக்க வாய்ப்புள்ளது. பிரான்சில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தும் தினமும் 65,000 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோன்ற பாதிப்பு இந்தியாவிலும் ஏற்பட்டால் ஒவ்வொரு நாளும் 14 முதல் 15 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவர்’ என்றார். இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், ‘தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 20 நாட்களாக 10,000க்கும் குறைவாகவும், வாராந்திர பாசிடிவ் ஒரு மாதத்திற்கு 1%க்கும் குறைவாகவும் உள்ளதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்றார்.

Tags : India , Does corona affect 15 lakh people daily in India as compared to African and European countries? Warning because Omigron is spreading fast
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...