உத்தரபிரதேச பாஜக முதல்வர் யோகியை மாற்ற 48% பேர் ஆதரவு; ‘சி-வோட்டர்’ கருத்துக்கணிப்பில் தகவல்.!

புதுடெல்லி: உத்தரபிரதேச பாஜக முதல்வர் யோகியை மாற்ற 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக ‘சி-வோட்டர்’ கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த விவசாயிகள் மீது வாகனங்கள் மோதியதில் கடந்த அக். 3ம் தேதி 4 விவசாயிகள் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. இவ்வழக்கில் ஒன்றிய பாஜக உள்துறை இணை அமைச்சரான அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), லக்கிம்பூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதன் தொடர்ச்சியாக தார்மீகப் பொறுப்பில் அஜய் மிஸ்ரா தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இப்பிரச்னை வரவிருக்கும் உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், அமைச்சரின் பதவி பறிக்க முடியாது என்று ஆளும் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா விவகாரம், முதல்வர் யோகி ஆதித்ய நாத் மீதான அதிருப்தி ஆகியன தேர்தலில் எதிரொலிக்குமா? என்பது குறித்து ‘சி-வோட்டர்’ செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது.

கடந்த 9ம் தேதி முதல் நேற்று வரை எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் பார்த்தால் யோகி ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளது தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்பின்படி 48 சதவீதம் பேர் யோகி ஆட்சியின் மீது கடும் கோபத்துடன் இருப்பதாகவும், அவரை மாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தனர். 27 சதவீதம் பேர் தாங்கள் கோபமாக இருப்பதாகக் கூறினாலும், யோகியை மாற்ற அவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும், 25 சதவீதம் பேர் யோகி மீது கோபம் இல்லை என்றும், அதனால் அவரை மாற்ற வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட கருத்துக்கணிப்புகளின்படி பார்த்தால் உத்தரபிரதேச பாஜக அரசின் மக்கள் கோபத்தில் உள்ளது தெரியவருகிறது.

Related Stories: