×

அதியமான்கோட்டை அருகே சிப்காட் அமைக்க நிலத்தை அளக்கச் சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு

நல்லம்பள்ளி: தர்மபுரி அருகே, சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிகாரிகளை சிறைபிடித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சிப்காட் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, இதற்காக அப்பகுதியில் 1773 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இப்பகுதியில் ஜவுளிப் பூங்கா மற்றும் எலக்ட்ரிக் பைக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக, 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, சர்வே செய்து வருகின்றனர். இதில் அதியமான்கோட்டை அருகே வெத்தலைக்காரன் கொட்டாயை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 400ஏக்கருக்கு மேல்  விவசாய நிலங்கள் கையகப்படுத்த உள்ளனர். இந்த நிலங்களில் நெல், கரும்பு, கேழ்வரகு, மரவள்ளி கிழங்கு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் தங்கள் விளை நிலங்களை கையகப்படுத்தாமல், இதே பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, மீண்டும் நிலங்களை அளவீடு செய்வதற்காக, தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெத்தலைக்காரன் கொட்டாய் பகுதிக்கு சென்றனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களையும், அவர்கள் வந்த வாகனங்களையும் சிறைபிடித்து, கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் தனி தாசில்தார் வெங்கடேஸ்வரன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மாவட்ட கலெக்டர் வந்தால் மட்டுமே, இங்கிருந்து கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். பின்னர், நல்லம்பள்ளி தாசில்தார் செந்தில், அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் ரங்கசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீண்டும் உங்களுக்கு தெரியாமல் இங்கு நிலம் அளவீடு செய்ய வரமாட்டோம் என கூறினர். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவித்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Chipkot ,Adiyamankottai , Capture of officers who went to survey the land to set up Chipkot near Adiyamankottai
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...