ஆவடி மாநகராட்சியில் மனிதக்கழிவுகளை அகற்ற ரோபோட்டிக் இயந்திரம்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகள் மற்றும் கழிவுகளை அகற்ற ரூ.40 லட்சம் செலவில் ரோபோட்டிக் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்காக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அர்ப்பணித்தார்.  பாதாள சாக்கடையில் உள்ள மனித கழிவுகளை மனிதனே இறங்கி அகற்றகூடாது. அந்த கழிவுகளை இயந்திரம் மூலம் மட்டுமே அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, ஆவடி மாநகராட்சியில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகள் மற்றும் கழிவுகளை அகற்ற ‘ரோபோட்டிக்’ என்ற தானியங்கி இயந்திரத்தை வாங்க நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, சமீபத்தில் ரோபோட்டிக் இயந்திரம் ரூ.39.80 லட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்டது. இதனை ஆவடி வீட்டு வசதி வாரியத்தில் ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர், நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து, ஆவடி மாநகராட்சியின் 48 வார்டுகளிலும் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காகவும் மற்றும் கழிவுகளை அகற்றவும்,  அடைப்புகளை நீக்கவும் இயந்திரம் பயன்படுத்த உள்ளது. இதனால், பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை சிறப்பாக செய்ய முடியும். அடைப்புகள் மற்றும் கழிவுகளையும் உடனடியாக அகற்ற வசதியாக இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆர்.சரஸ்வதி, பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சத்தியசீலன், சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாபர், மாநகர திமுக செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயணபிரசாத், நிர்வாகிகள் ருக்கு, ஆவடி பாலா, கார்த்திகேயன், யுவராஜ், ஆனந்தன், இளங்கோ, குமார், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: