சித்துவின் மிரட்டலுக்கு பணிந்தது பஞ்சாப் அரசு: டிஜிபி அதிரடி மாற்றம்

சண்டிகர்: பஞ்சாப்பில் காங்கிரஸ் தலைவர் சித்துவின் மிரட்டலுக்கு பணிந்து, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியால் நியமிக்கப்பட்ட டிஜிபி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கும் ஏற்பட்ட மோதலினால் அமரீந்தர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் புதிய கட்சி தொடங்கி, பாஜ.வுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளார். அமரீந்தருக்கு பதிலாக சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக பதவியேற்றார்.

இவருடைய அரசுக்கும் சித்து பல்வேறு வகைகளில் இடையூறு ஏற்படுத்தி வருகிறார். முதல்வர் பதவிக்கு சரண்ஜித் சிங் சன்னி வந்ததும், மாநிலத்தின் தலைமை வழக்கறிஞராக ஏபிஎஸ். தியோலையும், புதிய டிஜிபி.யாக இக்பால் பிரீத் சிங் சகோடாவையும் நியமித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, சித்து தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரை சோனியா காந்தி சமாதானப்படுத்தி, தலைவர் பதவியில் நீடிக்க வைத்தார்.

அதே நேரம், இவருடைய எதிர்ப்பு காரணமாக தலைமை வழக்கறிஞராக இருந்த தியோல் பதவி விலகினார். இந்நிலையில், மாநில டிஜிபியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி இக்பால் பிரீத் சிங் சகோடாவும் நேற்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, சித்துவால் பரிந்துரைக்கப்பட்ட சித்தார்த் சட்டோபாத்யாயாவை புதிய டிஜிபி.யாக முதல்வர் சன்னி நியமித்துள்ளார். இது சர்ச்சையாகி இருக்கிறது. ‘பஞ்சாபில் முதல்வர் சன்னியிடம் அதிகாரம் இல்லை. மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவே ஆட்சி நடத்துகிறார்,’ என்று பாஜ உள்ளிட்ட கட்சிகள்   விமர்சித்துள்ளன.

Related Stories: