×

பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் அரையிறுதியில் கிடாம்பி, லக்‌ஷியா: பதக்கத்தை உறுதி செய்து அசத்தல்

ஹுவல்வா: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்‌ஷியா சென் இருவரும் முதல் முறையாக பதக்கம் வெல்வதை உறுதி செய்தனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் நெதர்லாந்தின் மார்க் கால்ஜூவுடன் நேற்று மோதிய கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிரடியாக விளையாடி 21-8, 21-7 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 26 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் சீனாவின்  ஸாவோ ஜுன் பெங்குடன் மோதிய லக்‌ஷியா சென் 21-15, 15-21, 22-20 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வென்றார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1  மணி, 7 நிமிடங்களுக்கு நீடித்தது.

கிடாம்பி, லக்‌ஷியா இருவரும் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளனர். மேலும், அரையிறுதியில் இவர்கள் இருவருமே மோத உள்ளதால், பைனலுக்கு முன்னேறும் வீரர் இந்தியாவுக்காக தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உருவாகி உள்ளது. உலக சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்திய வீரர் ஒருவர் விளையாட இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் பதக்கம் வெல்லும் மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை லக்‌ஷியா சென் (20 வயது) பெற உள்ளார். முன்னதாக, 1983ல் பிரகாஷ் படுகோன் 28 வயதிலும், 2019ல் சாய் பிரனீத் 27 வயதிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

சிந்து ஏமாற்றம்: மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய நட்சத்திடம் பி.வி.சிந்து, அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை டாய் ட்ஸூ யிங்குடன் (சீன தைபே) நேற்று மோதினார். சிறப்பாக விளையாடிய டாய் ட்ஸூ யிங் 21-17, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 42 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இருவரும் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளதில் டாய் ட்ஸூ 15 வெற்றிகளை குவித்துள்ளார்.



Tags : Badminton World Championship Semi-Finals Kidambi ,Luxia , Badminton, World Championship, Semifinals,
× RELATED உலக சாம்பியனை வீழ்த்தி அசத்தல் இந்தியா ஓபனில் லக்‌ஷியா சாம்பியன்