×

விபத்தில் சிக்கி வீல்சேரில் இருக்கும் நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் வீட்டிலேயே ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்

கொச்சி: மம்மூட்டி நடிக்கும் ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தின் 5ம் பாகத்தில் ஜெகதி ஸ்ரீகுமார் நடிக்கிறார். இந்தியாவிலேயே அதிக பாகங்கள் உருவாக்கப்பட்ட படம், ஒரு சிபிஐ டைரி குறிப்பு. சேதுராம அய்யர் என்ற சிபிஐ அதிகாரி வேடத்தில் மம்மூட்டி நடித்த இப்படத்தின் முதல் பாகமான ஒரு சிபிஐ டைரி குறிப்பு 1988ல் வெளியானது. ஒரு கொலையை வித்தியாசமான கோணத்தில் துப்பறியும் இப்படம் தமிழகத்திலும் 100 நாட்களை கடந்து ஓடி வெற்றிபெற்றது. எஸ்.என்.சுவாமி கதை எழுத, கே.மது இயக்கியிருந்தார். சிபிஐ அதிகாரியின் உதவியாளர்களாக முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார் நடித்திருந்தனர்.

இப்படத்தின் 2, 3, 4ம் பாகங்கள் ஜாக்கிரதா, சேதுராம அய்யர் சிபிஐ, நேரறியான் சிபிஐ என்ற பெயர்களில் வெளியானது. இப்படங்களில் ஜெகதி ஸ்ரீகுமார் மாறுவேடத்தில் துப்பறியும் காட்சிகள் நகைச்சுவையும், சுவாரஸ்யமும் கொண்டவை. சமீபத்தில் இப்படத்தின் 5ம் பாகத்துக்கான படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது. 4 பாகங்களுக்கு கதை எழுதிய எஸ்.என்.சுவாமியே 5ம் பாகத்துக்கும்  எழுதுகிறார். கே.மது இயக்குகிறார். கடந்த 2012ல் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜெகதி ஸ்ரீகுமார், சிகிச்சைக்கு பிறகு பேசவும், உடலை அதிகமாக அசைக்கவும் முடியாத நிலையில் பல வருடங்களாக சக்கர நாற்காலியில் நடமாடி வருகிறார்.

ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தின் முதல் 4 பாகங்களில் நடித்திருந்த அவர், தற்போது 5வது பாகத்தில் நடிக்க முடியாமல் போய்விடுமோ என்று அவரது ரசிகர்கள் கவலைப்பட்ட நிலையில், ஜெகதி ஸ்ரீகுமார் 5ம் பாகத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல்நிலையை கவனத்தில் கொண்டு அதற்கு தகுந்த மாதிரி அவரது கேரக்டர் மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் நடிக்கும் காட்சிகள் அவரது வீட்டிலேயே படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.



Tags : Jagathy Sreekumar , Accident, actor Jagathy Sreekumar, shooting
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...