சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட 3 மாநகராட்சி மற்றும் 28 நகராட்சிகளில் கவுன்சிலர் பதவியிடங்களின் எண்ணிக்கையை இறுதி செய்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன. தொடர்ந்து அதன்படி நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டன. அதில், சமீபத்தில் 3 மாநகராட்சி, 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்ட நிலையில், அந்த பகுதிகளில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டன. குறிப்பாக, ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சிகளில் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் புதிதாக வார்டுகள் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன.
அதன்பேரில் மாநில தேர்தல் ஆணையம் வார்டுகள் மறுவரையறை செய்து, அதன்பிறகு அவற்றை இறுதி செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் சிவகாசி மாநகராட்சிக்கு 48 கவுன்சிலர்களும், தாம்பரம் 70 கவுன்சிலர்களும், நாகர் கோயில் 52 கவுன்சிலர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டன. அதே போன்று, சுரண்டை, களக்காடு, திருக்கோவிலும், மாங்காடு, கோட்டைகுப்பம், சோளிங்கர், பொன்னேரி, திருநின்றவூர், வடலூர், அதிராமபட்டினம், திருச்செந்தூர், கருமத்தம்பட்டி, காரமடை, மதுக்கரை, பள்ளப்பட்டி, திருமுருகன் பூண்டி, மானாமதுரை, தாராமங்கலம், எடங்கானா சாலை ஆகிய நகராட்சிகளில் 27 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களும், உளுந்தூர் பேட்டை, திட்டக்குடி, லால்குடி, முசிறி, புகலூர் ஆகிய நகராட்சிகளில் 24 கவுன்சிலிர் பதவியிடங்களும், குன்றத்தூர், கூடுவாஞ்சேரி-நந்திவரம் ஆகிய நகராட்சிகளில் 30கவுன்சிலர் பதவியிடங்களும், கொல்லங்கோடு நகராட்சியில் 33 கவுன்சிலர் பதவியிடங்களின் எண்ணிக்கையை இறுதி செய்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.