×

மெரினா உள்ளிட்ட கடற்கரைகளை தொடர்ந்து நட்சத்திர ஓட்டல், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை?: அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க காவல் துறை முடிவு

சென்னை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. அதைதொடர்ந்து பண்ணை வீடுகள், நட்சத்திர ஓட்டல், ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சில கட்டுப்பாடுகளுடன் தடை விதிக்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும். குறிப்பாக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் டிசம்பர் 31ம் தேதி இரவு ஒன்று கூடி புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். அதுபோல அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகளிலும் மது விருந்து மற்றும் கச்சேரிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெறும்.

கொரோனா பெரும் தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனால், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் போனது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. அதேநேரம், மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூடி ஆங்கில புத்தாண்டு கொண்டாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகளின் பக்கம் திரும்பி உள்ளனர். எனவே, கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் சில கட்டுப்பாடுகளுடன் தடை விதிக்க மாநகர காவல் துறை முடிவு செய்துள்ளது.

அதற்கான நடவடிக்கையாக அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்த மாநகர காவல் துறை முடிவு செய்துள்ளது. ஓரிரு நாளில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளை போன்றும் நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க மாநகர காவல் துறை தயாராகியுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல் துறை செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒமிக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால், கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags : New Year ,Marina ,Police Department , Marina Beach, Police
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!