×

பொறியாளர்களின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு உறுதி

சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் இருபெரும் விழா சென்னையில் நடந்தது. விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் இல்லக் கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அவர்  மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்க வலைத்தளத்தையும், இணையவழியில் சங்கத்திற்கு நன்கொடை வழங்கும் வசதியையும் முதன்முதலாக தொடங்கி வைத்தார். விழாவில் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன், பொதுச் செயலாளர் தீபக், பொருளாளர் தேன்மொழி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் போது, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கத்தின் சார்பாக அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், கலைஞர் முதல்வராக இருந்த போது, பொறியாளர்களுக்கு திருத்திய 6வது ஊதியக்குழு ஊதியத்தை 2010ம் ஆண்டு வழங்கினார். பின்னர் அமைந்த அரசு, பொறியாளர்களின் ஊதியத்தை குறைத்து விட்டது. இன்றளவும் குறைந்த ஊதியத்தையே பொறியாளர்கள் அனைவரும் பெற்று வருகின்றனர்.  கலைஞர் வழங்கிய ஊதியத்தை மீண்டும் வழங்கி அதன் அடிப்படையில் 7வது ஊதியக்குழு உயர்வுகளை பொறியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையில் பணிச்சுமையை குறைப்பதற்காகவும், பணிகள் தரமாக நடைபெறுவதற்கும், பொதுப்பணித்துறையில் உள்ளது போல், மண்டல வாரியாக தலைமைப் பொறியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையில், முதன்மை இயக்குநர் பதவியின் பெயரை முதன்மை தலைமைப் பொறியாளர் என்று பெயர் மாற்றம் செய்தல் வேண்டும்.  தொழில்நுட்பம் தொடர்பான கருத்துருக்களை பரிசீலித்து அரசுக்கு ஆலோசனை வழங்க  நெடுஞ்சாலைத்துறைக்கென தலைமைச் செயலகத்தில் தலைமைப் பொறியாளர் நிலையில் சிறப்பு செயலாளர் பதவி ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் செயல் இயக்குநராக பணியில் உள்ள தலைமைப் பொறியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில், திட்டப்பணிகள் காலதாமதமின்றி விரைவில் நிறைவேற, திட்டங்களை செயல்படுத்துகின்ற பொறியாளர்களுக்கும், அதற்கு உதவுகிற பணியாளர்களுக்கும், 10 சதவீதம் விழுக்காடு ஊதியத்தை கூடுதல்படி என்கிற அடிப்படையில் வழங்க வேண்டும் என்று பொறியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகள் அனைத்தையும் அமைச்சர் எ.வ.வேலு கேட்டறிந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக பொறியாளர் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.


Tags : Minister ,EV Velu , Minister E.V.Velu
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...